அரியலூர், தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு-வினர் 42 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு செய்யும் சங்கத்தை ஏற்க மறுக்கும் சாம்சங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சட்டப் படி போராட்டம் நடத்தும் தொழிலாளர்களையும், அவர்களுக்கு தலைமை தாங்கும் சிஐடியு தலைவர்களையும் கைது செய்த காவல் துறையினரைக் கண்டித்தும், அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட அச்சங்கத்தினர், பின்னர் சிறிது தூரம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம், பொருளாளர் கே.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் அருண்குமார் உள்ளிட்ட 42 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.