தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், நவ- 27. தஞ்சாவூர் முள்ளிவாக்கால் முற்றத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் துணை செயலாளர் ந.மு. தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் சா.ராமன், துணை செயலாளர்கள் வழக்குரைஞர் த.பானுமதி, பொறியாளர் ஜோ.கென்னடி ஆகியோர் உரையாற்றினார்கள்.
இலங்கையில் நடைபெற்ற தமிழீழத்திற்கான போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், எல்லைப்படை, துணை ராணுவ படை வீரர்கள், புரட்சிகர மாணவர்கள் மற்றும் விடுதலைப் போரில் துணை நின்று உயிர்நீத்தவர்களுக்கு கடந்த 1989 ம் ஆண்டில் இருந்து விடுதலைப் புலிகள் சார்பில் மாவீரர் நாள் அறிவிக்கப்பட்டது.
இந்த நாளில் தாயகத்திற்கான விடுதலை போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, வீரம், தியாகங்கள், சித்திரவதைகளை எதிர்கொண்டு துணை நின்றவர்கள் நெஞ்சுறுதிகளை நினைவு கூறும் நாளாக மேதகு பிரபாகரன் அவர்களால் அறிவிக்கப்பட்டு மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகளில் நவம்பர் 27 மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நிறைவாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மாவீரர் நாள் பற்றியும், இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றியும் சிறப்புரையாற்றினார். முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் செயலாளர் பேராசிரியர் வி.பாரி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்விற்கு பிறகு மாவீரர் நினைவு நாள் சுடர் ஏற்றப்பட்டது. அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழ மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முடிவில் தமிழீழம் மலர துணை நிற்போம் என உறுதியேற்கப்பட்டது.