கோவில்பட்டி அருகே மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த இருந்த பத்து டன் ரேஷன் அரிசி பறிமுதல் – வருவாய்த் துறையினர் நடவடிக்கை

தேங்காய் மற்றும் இளநீர் கொண்டு செல்வது போல ரேஷன் அரிசியை கடத்து முயற்சி – அதிகாரிகளைப் பார்த்ததும் மினி லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓட்டம் பிடித்த நபர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன் தலைமையில் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளாலங்கோட்டை பகுதியில் சென்ற மினி லாரியை சோதனையிட முயன்ற போது, மினி லாரி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்குள்ள ஹரிஹர பெருமாள் கோவில் முன்பு மினிலாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் லாரியில் இருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்‌ இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்த போது லாரியில் 40 கிலோ எடையுள்ள 250 பைகளில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 10டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு உதவி ஆய்வாளர் அரிக் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், மறுபக்கம் ரேஷன் அரிசி கடத்தல் என்பது எவ்வித பயமும் இல்லாமல் ஜோராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ரேஷன் கடத்தியவர்கள் மீது வெறும் வழக்கு பதிவு செய்யாமல் அவர்கள் ரேஷன் அரிசி கடத்தல் மூலமாக சேர்த்து வைத்துள்ள சொத்து விவரங்களை கணக்கிட்டு முடக்கி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ரேஷன் அரிசி கடத்தல் என்பது குறைய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *