வலங்கைமான் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் கூடுதலாக அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி, அன்னுக்குடி, வேலங்குடி, நார்த்தங்குடி உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் குக்கிராமங்கள் அதிகமாக உள்ள மேல விடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகை திடல், உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83, ரகுநாதபுரம் ஆகிய எட்டு கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 2022-23 ஆம் நிதியாண்டில் மூலாவாஞ்சேரி, வேலங்குடி, வீராணம் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி உள்ளிட்ட 11 ஊராட்சிகளிலும் பணிகள் நடைபெற்றது.
நடப்பு நிதியாண்டில் (2024-25) ஆதிச்சமங்கலம்,ஆவூர், அரித்துவாரமங்கலம், களத்தூர், கண்டியூர்,மாத்தூர், பாப்பாக்குடி, நல்லூர், பூனாயிருப்பு,சாரநத்தம், தெற்கு பட்டம் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று வரும் 2025- 26 நிதி ஆண்டில் ரெகுநாதபுரம், கிளியூர் உள்ளிட்ட ஒன்பது கிராம ஊராட்சிகளிலும் பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் கடந்த 2021 நிதி ஆண்டு முதல் 2024-25 ஆம் நிதி ஆண்டு வரை 41 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள ஒன்பது கிராம ஊராட்சிகளில் வரும் நிதியாண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது.