வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலோர டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழக அரசு வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது கனமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து துறை அதிகாரிகளும் முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும் எனவும், குடியிருப்புகளை மழை, வெள்ளம் சூழ்ந்தால் குடியிருப்புகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைக்க தேவையான இடங்களில் முகாம் அமைக்கவும், பொது மக்களுக்கு தேவையான உணவு தயார் செய்து வழங்கிடவும் அறிவுறுத்தினார்.

மேலும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், குளம், ஆறு ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும் விதமாக மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தினார்.


இந்த கூட்டத்தில் சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம்,நீர்வளத்துறை, வேளாண்துறைஉள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

எஸ் செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *