காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த விருதாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணை 4வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
வெண்ணிலாவுக்கும் மகேஷ் குமாருக்கும் தகராறு ஏற்பட மகேஷ் குமார் வெண்ணிலாவை பிரேக் அப் செய்து திருமணம் செய்து கொள்ள முடியாது என வெண்ணிலாவிடம் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெண்ணிலா நேற்று முன் தினம் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை காதலித்து மகேஷ் குமார் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நான் வெண்ணிலாவே திருமணம் செய்து கொள்கிறேன் என மகேஷ் குமார் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று ஊத்துக்காட்டில் உள்ள தனது குலதெய்வ கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று தனது பெற்றோரிடம் பணம் கொடுத்து தாலி மற்றும் கல்யாணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் பொருள்களை வாங்கி வர சொல்லி உள்ளார். நேற்று இரவு கல்யாணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தவுடன் வீடு உள்பக்கமாக பூட்டியிருப்பதை பார்த்து கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது மகேஷ் குமார் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளார்
உடனே அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மகேஷ் குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இரவில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
