திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ளது, பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது, இந்நிலையில் தாலுக்காவிற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 3 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின, தொடர்ந்து மழை நீர் வயல்களில் தேங்கி இருப்பதால் அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. அதேபோன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது . இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட செயற்குழு கந்தசாமி ஆகியோர் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஓம் சிவகுமார் முன்னிலையில் மண்டல பொறுப்பாளரும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலருமான அமுதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில் மழையால் பாதிப்படைந்த நபர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில் முரளி, தமிழ்ச்செல்வன், பாலையன், மணிகண்டன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
