மக்களின் நலன் கருதி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவ்வப்போது ஆய்வு செய்து, நிறைந்தது மனம் என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் அரசுத் திட்டங்களின் பயன்கள் குறித்தும் கேட்டறிந்து வருகின்றார்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பொதுமக்களிடம் விற்பதற்கு ஏதுவாக அரசால் வழங்கப்படும் நடமாடும் காய்கனி வண்டிகள் கேட்டு விண்ணப்பித்த நபர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நடமாடும் காய்கனி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தேசிய தோட்டக்கலை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் அரசு மானிய உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது. நடமாடும் காய்கனி விற்பனை வண்டியின் மொத்த விலை ரூ.30,000 ஆகும். இதில் 50 சதவீதம் அரசு மானியத்துடனும், 50 சதவீதம் பயனாளியின் பங்குத் தொகையுடனும் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி வழங்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 80 விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நடமாடும் காய்கனி விற்பனை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் 20 வண்டிகளும், 2022-23 ஆம் ஆண்டில் 60 வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 90 வண்டிகள் வழங்க 13.50 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்படுகின்றது. இத்திட்டம் பயனாளிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்

இத்திட்டத்தில் பயனடைந்த இரூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் தெரிவிக்கையில், நான் எங்கள் பகுதியில் தினந்தோறும் கூடையில் காய்கனிகளை வைத்து தலையில் சுமந்து வீதி வீதியாக சென்று வியாபாரம் செய்து வந்தேன். தோட்டக்கலைத் துறையில் மானிய விலையில் நடமாடும் வண்டி வழங்கப்படுவது குறித்து அறிந்து, அதற்காக விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த 20 நாளிலேயே எனக்கு வண்டி வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்களின் கோரிக்கை மனுக்களின் மீது இந்த அரசு எவ்வளவு அக்கரையுடன் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்பதற்கு நானே உதாரணம். என் வாழ்வாதாரத்திற்கு இந்த வண்டி பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.


இந்நிகழ்வின்போது, வடிவேல்பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சக்திவேல் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *