கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து திறமையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் நுணுக்கங்களை பிரதிபலிக்கும் பல்வேறு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும் மாணவர்களின் அறிவாற்றலை பரிசோதிக்கும் வகையில் வினாடி வினா போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி துவக்கி வைத்தார். “இளமை, புத்திசாலித்தனம் மற்றும் எல்லையற்ற புதுமையின் பிரகாசமான கொண்டாட்டமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. மாணவர்களின் படைப்புகள் நிலையான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டுகின்றன,” என அவர் உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. பொன்னுசாமி வரவேற்புரையாற்றி, “இளம் மனங்கள் வெளிப்படுத்தும் அறிவியல் ஆர்வமும் படைப்பாற்றலும், நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கிய ஆற்றலாகும்” எனக் கூறினார்.
தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ரமணி, “மாணவர்களின் அறிவியல் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என பாராட்டினார்.
இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.