புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். துவக்க ஆண்டுகளில் அதுபற்றி காதில் போட்டுக் கொள்ளாத என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு ஆட்சி காலம் முடியும் இந்த கடைசி ஆண்டில் பெயருக்கு சில நூறு பணியிடங்களை நிரப்பி மக்களிடம் பெயர் வாங்க முயற்சிக்கிறது.
குரூப்–பி, குரூப்–சி பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்த அரசு அதன்படி காவலர், எழுத்தர், உதவியாளர், பொறியாளர், தாசில்தார், கிராம உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்பியது. சில மாதங்களுக்கு முன்பு நலவழித்துறையில் ஏஎன்எம், மருந்தாளுநர், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் போன்ற பணிகளையும் அதே வழியில் தேர்வு செய்தது. இதுபோன்ற தேர்வுகளை முறையாக நடத்திட புதுச்சேரி தேர்வு ஆணையம் ஒன்றையும் சமீபத்தில் அரசு நிறுவி உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள 226 செவிலியர் பணியிடங்களை இதற்கு மாறாக 10 மற்றும் 12–ஆம் வகுப்பு, செவிலியர் வகுப்பு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இவைகளின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். தேர்வு நடத்துவதே வெளிப்படையான வழி என்று பின்பற்றி வந்த அரசு, செவிலியர் தேர்வில் மட்டும் மதிப்பெண் அடிப்படையை முன் வைப்பது ஏன்?. ஒன்றிய அரசின் செவிலியர் வகுப்புத் தேர்வுக்காக ஆண்டுக்கு இருமுறை நார்செட் (NORCET) என்ற தேர்வு முறையை பின்பற்றி வரும் நிலையில் புதுச்சேரி அரசு இதனை புறக்கணித்து மதிப்பெண் முறைக்கு தாவுவதின் அவசியம் என்ன?.
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டியவர்களை முறைகேடாக உட்புகுத்தவா?. இதன் மூலம் ஊழலும், லஞ்சமும் நடக்க வழிவகுக்கும்.
ஜிப்மர்–புதுச்சேரி அரசு செவிலியர் பள்ளிகளில் படித்தவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கும் நிலையிலும், தனியார் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படும் நிலையிலும் மதிப்பெண் அடிப்படை என்பது அரசு நிறுவனங்களில் பயின்றவர்களில் திறமையானவர்கள் புறக்கணிக்கப் படுவார்கள்.
செவிலியர் கல்வி முடித்து பல ஆண்டுகள் மருத்துவ பணியின்றி வீட்டில் இருப்பவர்கள் மூப்பின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு ஆகும் நிலையில், புதிதாக முடித்த திறன் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவர்.
மேற்குறித்த குறைபாடுகள் எல்லாம் இந்த மதிப்பெண் தேர்வு முறையில் இருப்பதால் இந்த தேர்வு முறையே முறையற்றதாக ஆகிறது. ஆகவே, மற்ற பணியிடங்களைப்போல செவிலியர் பணியிடங்களுக்கும் நேரடி எழுத்துத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செவிலியர்கள் பணி நியமனத்தில் தான் இந்த நிலை என்றால் சுகாதாரத் துறை பணி மாறுதலில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி உள்ளது. பணிமாறுதல் பாலிசியை முறையாக பின்பற்றாமல் துறையின் அதிகாரிகளே அதனை காற்றில் விடும் அவலம் சுகாதாரத் துறையில் நீடித்து வருவது கண்டனத்திற்குரியதாகும். ஆகவே, பணி மாறுதல் விஷயத்தில் சுகாதாரத்துறை முறையாக பணிமாறுதல் பாலிசியை கடைபிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்.