வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை இயக்குநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை மேற்கொண்டார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் செய்யப்பட உள்ள பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குவிடியினர் நலத்துறை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, வில்லியனூர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கொடுப்பதாக சொன்ன இடத்தில் உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நத்தம் புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். புதியதாக இடம் கையகப்படுத்தி இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சிறப்புக்கூறு நிதியில் கோவில் வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததை கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட் பகுதியில் 2023–24ஆம் நிதியாண்டில் இலவச மனைப்பட்டா கொடுத்த பகுதிக்கு புதிய சாலை வசதி முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விளையாட்டுத் திடலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி பாதியில் நிற்பதை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். அதேபோல், 2024–25–ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட ஒதியம்பட்டுபேட், பெரியபேட், ஜி.என்.பாளையம்பேட், குப்பம்பேட், பீமாராவ் நகர் ஆகிய பகுதிகளில் பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணியை துரிதமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2025–26–ஆம் நிதியாண்டில் பீமாராவ் நகரில் பழுதடைந்துள்ள மின்சார கம்பிகளை மாற்ற வேண்டும், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஒதியம்பட்டுபேட் சுடுகாட்டு பாதைக்கு மின்விளக்கு, மும்முனை மின்சார வசதி, புதிய கருமாதி கொட்டகை அமைத்தல், உத்திரவாகினிப்பேட்டில் சமுதாய நலக்கூடம், புதிய நூலகம், பெரியபேட்டில் சமுதாய நலக்கூட்டம், நூலக வசதி, சுடுகாடு, பெரியபேட், பீமாராவ், டாக்டர் அம்பேத்கர் நகர், புதுப்பேட், உத்திரவாகினிப்பேட் ஆகிய பகுதியில் சுடுகாடு மேம்படுத்த வேண்டும். ஜி.என்.பாளையம்பேட் பகுதியில் நீர்பாசன வாய்க்காலை தூர்வாரி புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பலவேறு பணிகளை துரிதமாக முடித்துக் கொடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் பழநிசாமி, வர்த்தகர் அணித் தலைவர் குரு என்கிற சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.