சுரண்டை
சுரண்டைக்கு முதலமைச்சர் எந்த திட்டங்களையும் அறிவிக்காதது அப் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அரசு மருத்துவமனை வேண்டும் என பெண்கள் முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தந்தார். ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக அவர் தென்காசி சென்றபோது சுரண்டையின் எல்லை முதல் கடைசி வரை பொதுமக்கள் ரோட்டின் இருபுறமும் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனால் முதலமைச்சர் பல இடங்களில் வாகனத்தை நிறுத்தியும் வாகனத்தில் இருந்து இறங்கியும் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்
இதில் சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவ, மாணவிகள் முதல்வரை காண காத்திருந்தனர். மாணவர்களை கண்ட முதல்வர் வாகனத்தை விட்டு இறங்கி வந்து பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.மேலும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தி வாழ்த்தினார்.
அப்போது அங்கே வந்த சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்க ரதி, பிரேமா ராணி, அழகு சுந்தரி, பேபி, பாப்பா, சின்னத்தாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக முதல்வரிடம் சுரண்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது.போதிய மருத்துவர் இல்லை. நாங்கள் மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி செல்ல வேண்டி உள்ளது எனவே சுரண்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 50 படுக்கை வசதியுடன் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தர வேண்டுமென நேரடியாகவே கோரிக்கை வைத்தனர். கண்டிப்பாக நிறைவேற்றி தருவதாக அந்தப் பெண்களிடம் முதல்வர் உறுதி அளித்தார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் சுரண்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுரண்டையில் அரசு பஸ் டெப்போ, சுரண்டையில் அரசு மருத்துவமனை, இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவிப்பார் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர் ஆனால் சுரண்டை பகுதிக்கு எந்த திட்டங்களையும் முதலமைச்சர் அறிவிக்கவில்லை ஆகவே சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்