பொன். குமார்

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பர். இன்றைய செய்தியை இன்றே ஹைக்கூவாக்குபவர் கவிஞர் இரா. இரவி.

மக்களை மேம்பாடடையச் செய்யவும் நாட்டை முன்னேற்றம் பெறச் செய்யவும் முற்போக்குச் சிந்தனைகளை பரவச் செய்யவும் ஆர்வம் கொண்ட இரவிக்கு ஹைக்கூ வடிவம் அருமையாக பொருந்தி வருகிறது. ஹைக்கூ வாயிலாக அநியாயங்களை எதிர்க்கிறார். நியாயம் கோருகிறார். சம்பவங்களையும் ஹைக்கூவாக்கும் சாதுர்யமிக்கவர். கவிஞருக்குள் ஏற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த ஹைக்கூவை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்.

மனிதருக்கு சுவாசம் போல இரவிக்கு ஹைக்கூ. ஹைக்கூவைத் தொடர்ந்து எழுதுகிறார். இதழிலும் வெளிவரச் செய்கிறார். வெளிவந்தவைகளைத் தொகுத்து தொகுப்பாக்குகிறார்.

ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ, நெஞ்சத்தில் ஹைக்கூ என்னும் நான்கு தொகுப்புகளுக்குப் பிறகு கவிஞர் தந்திருக்கும் ஹைக்கூத் தொகுப்பு ‘ இதயத்தில் ஹைக்கூ’.

அதிகம் ஹைக்கூ எழுதியவரும் அதிகம் தொகுப்பு வெளியிட்டவரும் என்னும் சாதனையும் படைத்தவராக இரவி விளங்குகிறார். ஹைக்கூ வேந்தன் என்னும் பட்டம் வழங்கி சிறப்பிக்கும் தகுதியும் பெற்றவர்.

உயிர்கள் மரித்தன
மரிக்கவில்லை மனிதநேயம்
குவிந்தன நிதிகள்

என்பது ஒரு நல்ல ஹைக்கூ. சுனாமிக்குப் பிறகு மக்கள் மனங்களில் வெளிப்பட்ட கருணையை ஹைக்கூவாக்கித் தந்துள்ளார்.

பெரும்பங்கு
பண்பாட்டைச் சிதைப்பதில்
விளம்பரங்கள்

என்னும் ஹைக்கூ மூலம் கேடு விளைவிக்கும் விளம்பரங்களை விளம்பரப்படுத்தியுள்ளார். விளம்பரங்கள் பண்பாட்டை மட்டுமல்ல மிக முக்கியமாக பெண்ணியத்தை அவமதிக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஹைக்கூவிலும் கவிஞரின் கோபம், ஆவேசம் வெளிப்பட்டுள்ளன. சிலவற்றில் எள்ளல் தன்மை மிகுந்து சென்ரியுவாக உள்ளன. இத்தொகுப்பின் சிறப்பம்சமாக இருப்பது புகைப்படங்களுக்கு ஹைக்கூக்கள் எழுதியது. புகைப்படம் ஒரு காட்சி ஹைக்கூ எனில் பல்வேறு பரிமாணங்களில் காட்டியிருந்தது.

ஹைக்கூவில் தனித்தடம் பதித்த கவிஞர் இரா. இரவி கவிதையிலும் திறத்தைக் காட்டியுள்ளார். ‘ கவிதைச் சாரல்’ என்னும் முதல் தொகுதியே புதுக்கவிதைகளால் நிறைந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகும் தொகுப்பு ‘ கவிதை அல்ல கவிதை ‘. கவிதைகள் பாடல்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. பாரதி, பாரதி தாசன், நேதாஜி, பெரியார், காமராஜர், தெரசா, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா, வல்லிக்கண்ணன், அப்துல் கலாம் என ஆளுமைகளை பாடல்களில் பாடி காட்டியுள்ளார்.

தாய்மொழியோடு தன்மானமும் பயிற்றுவித்தாய்
தன்னிகரில்லாப் பாசமும் பொழிந்தாய்

என தாய்க் குறித்து எழுதியது நெகிழ்த்துகிறது.

கவிஞர் இரா. இரவியின் இடையறாது தொடரும் இலக்கியப் பயணம் சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் நன்மை பயப்பதாக உள்ளது. கவிஞருக்கு பாராட்டுக்கள். ஹைக்கூத் தோழர் இரா. இரவியின் இலக்கியத் தொண்டு தொடர வாழ்த்துகள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *