ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் நன்னிலத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்திற்கு கிளைச் செயலாளர்களும், வார்டு செயலாளர்களும் ஆணிவேராக திகழுகிறார்கள். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தை வலுவோடு வைத்திருப்பவர்கள். 85 வயது முதல் 25 வயது வரை என அனைத்து தரப்பினரும் இக்கட்சியில் நிர்வாகிகளாக உள்ளனர்.

கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சரி என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழகத்தினுடைய முதலமைச்சர் கைதைப் பார்த்து பதறுகிறார். உடனடியாக ஓடிப்போய் செந்தில் பாலாஜியை பார்க்கிறார்.

கைது நடவடிக்கையை குற்றம் சொல்லுகிறார். அமலாக்கத்துறை என்பது தன்னாட்சியோடு செயல்படக்கூடிய அமைப்பு. இதில் யாரும் தலையிட முடியாது. ஆதாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். அவர்களது சொத்துக்களை முடக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரங்களை அன்றைக்கு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வழங்கினார். ப.சிதம்பரம் வழங்கிய கூடுதல் அதிகாரத்தின் அடிப்படையிலேயே அமலாக்க துறைக்கு இன்று கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செந்தில் பாலாஜியை தொடர்ந்து தனக்கு ஏதும் பிரச்சனை வந்து விடுமோ என முதலமைச்சர் பதறுகிறார். செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அந்த வகையில் திருவாரூரிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேசினார். நிகழ்ச்சியின் போது ஒன்றியச் செயலாளர்கள் ராம.குணசேகரன், அன்பழகன், கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலாஜி, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *