அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் சட்ட விரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு இருதய ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை மேற் கொள்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காவேரி மருத்துவ மனை டாக்டர்கள் குழவினர் செந்தில்பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்துள்ளனர். இதன் முடிவுகளில் அறுவை சிகிச்சையை மேற் கொள்வதற்கு செந்தில் பாலாஜியின் உடல் முழு தகுதியுடன் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இதையடுத்து வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் இருதய ஆபரேசனுக்கு தேவையான இறுதிக்கட்ட உடல் பரிசோதனைகளை செந்தில்பாலாஜிக்கு மேற் கொள்ள டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற புதன்கிழமை செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் தொடர்ச்சியாக சில நாட்கள் வரையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படவே வாய்ப்புள்ளது. செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து உள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அவரிடம் முதல்நாள் விசாரணையை தொடங்கி விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறையினர் நேற்று காலை 10 மணிக்கே வந்து விடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முழுவதுமே அமலாக்கத்துறையினர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறையினருக்கு நேற்று முன்தினம் (16-ந்தேதி) மாலையில் அனுமதி கிடைத்தது. இதன் மூலம் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை காவலில் இன்று 3-வது நாளாக உள்ளார். வருகிற 21-ந்தேதி ஆபரேசன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்த 2 நாட்களில் (23-ந்தேதி) அமலாக்கத்துறை காவல் முடிவடைகிறது. இதனால் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது எப்போது? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 8 நாள் காவலில் செந்தில்பாலாஜியிடம் சரியாக விசாரணை நடத்த முடியாமல் போனால் அதையே காரணமாக கூறி மேலும் சில நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சில நாட்கள் கழித்து அவரை மீண்டும் காவலில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அமலாக்கத்துறையினர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக இ.எஸ்.ஐ. மருத்துவக்குழு மற்றும் ஜிப்மர் மருத்துவ குழு, எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் மருத்துவ அறிக்கையை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *