தூத்துக்குடி மீளவிட்டான் வி.எம்.எஸ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (40). இவருக்கு சொந்தமான ஒரு ஆடு அப்பகுதியில் உள்ள மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்தது, அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி அந்த ஆட்டை தூக்கிக் கொண்டு திருடி சென்றனர். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்த சேர்ந்த மணிகண்டன் (29), குறிஞ்சி நகரை சேர்ந்த சரவணன்( 31), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராமர்(51) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆட்டை திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மது குடிக்க ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லாததால், அவர்களது மற்றொரு நண்பரின் காரில் சென்று ஆட்டை திருடி சென்று விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடிக்க ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார், கைதான 3 பேருக்கும் இதேபோன்று வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.