நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் ” பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி,மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கலைத் திருவிழா – 2025-2026” பள்ளிகள் தோறும், நடைபெற்றது. இதில் இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வழிகாட்டுதலின் படி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.
விழாவின் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துடன், குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) திரு. டி. பச்சமுத்து அவர்கள் தலைமையில், கல்லூரியின் இயக்குநர்- கல்வி முனைவர். இரா. செல்வகுமரன் அவர்கள் முன்னிலையில், முதல்வர். முனைவர். எஸ்.பி. விஜயகுமார், துணை முதல்வர் முனைவர். ஆ. ஸ்டெல்லா பேபி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் து. ஜோதிகண்மணி, வட்ட வளமைய மேற்பார்வையாளர் அ.செண்பக வடிவு, வட்டாரக் கல்வி அலுவலர்கள், கோபாலகிருஷ்ணமூர்த்தி, திரு. கிருஷ்ணன் மற்றும் திரு. பிரபு குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி பி. மகேஸ்வரி வருகை புரிந்து மாணவர்களை வாழ்த்தினார்.
போட்டிகளில் பங்கேற்க சுமார் 800-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரும், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கல்லூரிக்கு வருகை புரிந்தனர்.
விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு எட்டு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், இசைப் போட்டியில் தோல்,துளை மற்றும் நரம்புக் கருவிகளில் மாணவர்கள் இசைமீட்டினர். நடனத்தில் பரதநாட்டியம், கரகாட்டம் கும்மியாட்டம், பொம்மலாட்டம் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களை மாணவ, மாணவிகள் ஆடினர். கவின் கலைகளான நுண்கலையில் ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள், கேலிச்சித்திரம் மற்றும் ரங்கோலி ஆகிய படைப்புகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
பாடலில் நாட்டுப்புறப் பாடல், செவ்வியல் இசை மற்றும் வில்லுப்பாட்டு ஆகியவை பாடப்பட்டன. நாடகத்தில் பாவனை நடிப்பு, வீதி நாடகம் மற்றும் பல குரல் பேச்சு ஆகியவை நடிக்கப்பட்டன. இப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான “கலைத் திருவிழா” போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
போட்டிகளை கல்லூரியின் மொழியியல் புல முதன்மையரும், சமூக செயல்பாட்டு தலைவருமான முனைவர் மா. இராமமூர்த்தி, ஆசிரிய பயிற்றுநர்கள் ச. சென்றாய பெருமாள், வே. முருகேசன், பா. லதா, த. சியாமளா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஒன்றிய த்தின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
