வெளிச்ச விதைகள் !

நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை
முனைவர் ஞா. சந்திரன்
முதுகலைத் தமிழாசிரியர்
தூய மரியன்னை மேனிலைப்பள்ளி,
மதுரை- 625 001.

வெளியீடு ; வானதி பதிப்பகம்.
பக்கம் .190 விலை ரூபாய் 120

  1. தினதயாளு தெரு
    தியாகராயர் நகர்
    சென்னை 600 017.
    பேச 044- 24342810 / 24310769
    மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com ‘வெளிச்ச விதைகள்’ இந்நூலுக்கு பேரா. இரா. மோகன் அவர்கள் அணிந்துரை கொடுத்திருப்பது பொற்குடத்திற்கு பொட்டிட்டது போன்றதாகும்.

நூலாசிரியர் இரவி அவர்கள் தமிழுக்கு அரணாக விளங்கக்கூடியவர். தன்னை முழுமையாக தமிழுக்கு அர்ப்பணித்த தமிழன். இவரது தமிழ்ப்பற்றைப் பற்றி மதிப்புமிகு முனைவர் வெ. இறையன்பு I.A.S. அவர்கள் என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார்.

இவரது 16ஆவது படைப்பான ‘வெளிச்ச விதைகள்’
விதைகளின் வீரியம்… விருட்சமாய் வளர்ந்து சமுதாயத்திற்கு நிழலாய் திகழ்கின்றது.

நூலின் அகரமாய் ‘உன்னத உறவு’ என்ற கவிதையில் தாயின் உன்னதத்தை எடுத்துக் காட்டியுள்ளார். கடையேழு வள்ளல்களும் தாய் தந்தையாய் காட்சி அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

  “வயிற்றில் இருக்கையில் எட்டி உதைக்கையில்
  வலிதாங்கி எண்ணிச் சிரித்து மகிழ்ந்தவள்

தோழனாக இருந்து தோள் கொடுப்பவர் தந்தை
துவண்டால் தன்னம்பிக்கை தருபவர் தந்தை”

இந்நூலில் தமிழின் சிறப்புக்களை நயமாக எடுத்துக்கூறி புதிய ஆத்திசூடியைப் படைத்துள்ளார்.!

  முப்பாலின் கருத்துக்களை முத்து முத்தாய் கோர்த்து கவிமாலையாக வள்ளுவனுக்கு சூட்டியுள்ளார்.!

  ‘கடல்’ என்ற கவிதையின் மூலம் மீனவர்களின் நிலையை கண்ணீரோடு எடுத்துக்காட்டியுள்ளார்.  வரிகளை வாசிக்கும் போதே கண்கள் குளமாகின்றன!

  ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்ற தலைப்பின் மூலம், ‘என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும்’என்று வெற்றியின் சூட்சமத்தை அழகுற விளக்கியுள்ளார்.

  ‘ஏளனம் பேசி எள்ளி  நகையாடியவர்கள் நமது 
  எழுச்சி வளர்ச்சி கண்டு கூனிக்குறுகி - வேண்டும்!’

  தந்தை பெரியார், மாமனிதர் அப்துல்கலாம், கவிஞர் நா. முத்துக்குமார், பாடகர் திருவுடையான் ஆகியோரின் வாழ்வியலை வார்த்தை மின்னலாய் மின்னச் செய்துள்ளார்.

  உறவுகளின் மாண்பு, தமிழ்! தமிழன்! தமிழ்நாடு!, சமூகப்பதிவுகள், இயற்கைச் சித்திரிப்பு, தன்னம்பிக்கை முனை, காதல் உலகு, நாட்டு நடப்பு, சான்றோர் அலைவரிசை,   உதரிப்பூக்கள்... என ஒன்பது தலைப்பு-களாகப் பிரித்து வாசகர்களுக்கு தலைவாழை இலையில் விருந்து படைத்துள்ளார்.

  இந்நூல் ஒன்றை வாசித்தாலே பல நூல்களை வாசித்த நிறைவு ஏற்படும் என்பதற்கு இந்நூலின் அட்டைப் படமே சாட்சி.

  இவ்வெளிச்ச விதைகள் சமுதாய இருளைப் போக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

பணிகள் தொடரட்டும்………
வாழ்த்துகளுடன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *