வலங்கைமான் பேரூராட்சியில் செயல்படாத சிசிடிவி கேமரா மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்தப் பேரூராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம், அஞ்சலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகள் உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாகவும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மூலம் காவல்துறையினர் உதவியுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு பாபநாசம் சாலை, குடவாசல் சாலை, மன்னார்குடி சாலை, கும்பகோணம் சாலை, ஒருவழிப்பாதை, மாரியம்மன் கோவில், உண்ணாமலை அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் மூலம் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு, வணிக நிறுவனங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பது, குற்றங்களை தடுப்பது ஆகியவற்றுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கும் விதமாக முன்னதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்ததை அடுத்து காவல் நிலையத்தில் கண்காணிப்பு பதிவுகள் பதிவாகவில்லை. பொதுமக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *