பாபநாசம் காரையார் அணையில் இருந்து பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு – சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதான அணையான விளங்கும் பாபநாசம் காரையார் அணை திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி போன்ற தென் மாவட்ட மக்களின் குடிநீர் மட்டுமின்றி விவசாய தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.
இந்த நிலையில் பிசான பருவ சாகுபடிக்காக காரையார் அணையில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 151 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் தலைமையில் இன்று காரையார் அணையில் இருந்து விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
இதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கண்ணடியன் கால்வாய் உள்ளிட்ட 11 கால்வாய்கள் வழியாக சுமார் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக மற்றும் மறைமுக பாசன வசதி பெறுகின்றன.
மேலும் அணையில் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப திறந்துவிட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..