300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாரூர்., செப். 15-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று திருவாரூர் நகரில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதையொட்டி, திருவாரூரில் பிரசித்தி பெற்ற 300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பின்னர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பல்வேறு கனிகள் உள்ளிட்டவற்றை படைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மேலும், வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகளை பின்னர் நீர்நிலைகளில் கரைத்து, நீராதாரங்கள் பெருக வேண்டும் என்ற வேண்டுதலுடன் பொதுமக்கள் வழிபட்டனர்.
இதனிடையே, திருவாரூரில் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக கூறப்படும் சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவாரூரில் 500-வது பிள்ளையாராக அமைக்கப்பட்டு பக்தர்களால் தொடர்ந்து வழிபட்டு வரப்படும் இந்த கோவில், அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஐநூற்று பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, கொழுக்கட்டை, சுண்டல், கனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் படைக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐநூற்று பிள்ளையாரை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
ஐநூற்று பிள்ளையார் கோவில் திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருவதால், கோவிலைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்கு “ஐநூற்று பிள்ளையார் கோவில் தெரு” என பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.