கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகத்தை முற்றுகையிட முயன்ற போது தமுமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி மொழியில் இன்று திரையிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புரூக்பாண்ட் சாலை சிக்னல் அருகே முற்றுகையில் ஈடுபட வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்பொழுது தமுமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து தமுமுகவினர் தங்கள் கைகளில் வைத்திருந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்த்துடன், திரைப்படத்தை திரையிட அனுமதித்த தமிழக அரசை கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர்.

இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் , இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனயடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டம் காரணமாக புரூக்பில்ட்ஸ் மால் முன்பாக பரபரப்பான சூழல் நிலவியது. கோவையில் திரைபடம் வெளியாகும் மால்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *