புதுவை முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்தில் கொம்பாக்கம் விவசாய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.

இங்கு விவசாயத்திற்கு குறைந்த வட்டியில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்று பகுதியில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இங்கு மேலாளராக பணியாற்றுபவர் கதிரவன். இவரிடம் வந்த வாடிக்கையாளர் சிலர் தாங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த போது நகைகளை தராமல் அலைக்கழித்துள்ளார். இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்பெருமான் பதிவாளரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் இந்திரமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய 5 பேர் குழு சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர் கதிரவனிடம் பாதுகாப்பு பெட்டக சாவியை வாங்கி, திறந்து ஆய்வு செய்தது.

மதப்பீட்டுக்குழு நடத்திய ஆய்வில் 588 கிராம் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கூட்டுறவு சங்க தலைவர் புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இன்ஸ்பெக்டர் கலைசெல்வம், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கதிரவன் நகைகளை திருடி, அவரின் நண்பர் ராஜேஷ்குமாரிடம் கொடுத்ததும், அவர் நகைகளை வேறு கடைகளில் அடமானம் வைத்து அந்த பணத்தை செலவு செய்ததும தெரிய வந்தது.

இதையடுத்து கதிரவன், ராஜேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கதிரவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் ஏலச்சீட்டு நடத்தி வந்தேன். அதில் வந்த பணத்தை செலவு செய்துவிட்டேன். ஏலச்சீட்டு போட்டவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்கியிலிருந்த நகைகளை எடுத்த வெளியில் அதிகவிலைக்கு அடகு வைத்து அந்த பணத்தில் ஏலச்சீட்டு பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்களுக்கு சிறிது சிறிதாக கொடுத்துவந்தேன். மீதி பணத்தில் நானும், நண்பர் ராஜேஷ்குமாரும் ஜாலியாக செலவிட்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நகைகளை அடகு வைத்த இடங்களில் இருந்து நகைகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *