புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 10 சதவீதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளன. இந்த அரசு மதுபான கடைகளை திறக்க காட்டும் ஆர்வத்தை அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காட்டவில்லை. மக்களை குடிப்பழக்கத்திற்கு தள்ள காட்டும் ஆர்வத்தை கல்வி கற்கச் செய்ய காட்டவில்லை. உடனடியாக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
காவிரி நீர் திறக்கும் நிலை உள்ளது. மேட்டூர் அணையில் நீர் உள்ளதால் பாசனத்திற்காக வரும் ஜூன் 12ஆம் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது. ஜூன் கடைசியில் காரைக்காலிற்கு காவிரி நீர் வரும். ஆனால் காரைக்காலில் பாசன வாய்க்கால்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை. இதனால் காவிரியில் நீர் திறந்து வந்தாலும் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல் உள்ளது. எனவே ஒரு மாதத்திற்குள்ளாக புதுச்சேரி அரசு காரைக்காலில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும்.
நாற்றங்கால் விட்டு நடுவதற்கு வசதி செய்து தர வேண்டும். பயிர் கடன் பெறுவதற்கான வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும். மணல் கொள்ளை மீதான புகாருக்கு அரசு செவி மடுக்காமல், மணல் கும்பலுக்கு ஆதரவு அளித்து வருகிறது. உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு விவசாய சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக கடன் தரச் செய்ய வேண்டும். விவசாயத்திற்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்களை வழங்க வேண்டும்.
கூட்டுறவு விவசாய சங்கங்களில் நகைக்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றது. ஆனால் அங்கு வேலை செய்பவர்களே வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளை மாற்றி போலி நகைகளை வைக்கவும், திருடவும் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் அடகு வைக்கும் நகைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவ்வாறு தவறு செய்பவர்கள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக உள்ளது.
எனவே இவ்விஷயத்தில் தலைமை செயலர் உடனடியாக தலையிட்டு கூட்டுறவு விவசாய சங்கங்களில் விவசாயிகள் வைத்துள்ள நகைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் நகைகளை திருடும், போலி நகைகளை மாற்றி வைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *