எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக நெடுந்தூரம் செல்லும் ரயில்கள் சீர்காழி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் நிலை உருவானது.

கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இரவு நேரங்களில் ரயில்கள் நின்று செல்வது இல்லை.

இதனால் ரயிலில் பயணிக்கும் ஏழை எளிய மக்களும், வயது முதிர்ந்தவர்களும் சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சீர்காழிக்கு வந்து சேரும் அவல நிலையே தொடர்கிறது.

மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சீர்காழிக்கு வந்து சேர்வதற்கு உரிய நேரத்தில் பேருந்து வசதிகள் உரிய நேரத்தில் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்து சீர்காழி வந்தடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே 2019 வரை சீர்காழியில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல வேண்டும்

என வலியுறுத்தி பொதுமக்கள்,வணிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜுன் மாதம் 30 ஆம் தேதிக்குள் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை இரவு நேர ரயில்கள் எதுவும் சீர்காழி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் பொதுமக்களும் வணிகர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே அனைத்து ரயில்களும் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தொடர்ந்து சீர்காழி பகுதியை வஞ்சிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்தும் ரயில்வே தண்டவாளங்களில் தலை வைக்கும் போராட்டத்தை இரயில் நிறுத்த போராட்ட குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இன்று நடைபெற்ற அனைத்து கட்சியினர், வணிகர்கள் மற்றும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை நடத்துவது என ஏக மனதாக தீர்மானித்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் போராட்டம் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டும் பணியையும் துவங்கினர். இதனால் சீர்காழி நகரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *