-மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்.

உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்புதுறையும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையும் இணைந்து உலக அயோடின் குறைபாட்டு தடுப்பு தின விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசர நிதியம் ஆகியவை அக்டோபர் 21ஆம் தேதியை உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினமாக கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்புதுறையும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையும் இணைந்து உலக அயோடின் குறைபாட்டு தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் எம். திலகர் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணிதிட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா, என்எஸ்எஸ் திட்ட அலுவலர் எஸ். கமலப்பன், என்சிசி அதிகாரி முனைவர்.எஸ். அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு மருத்துவ நிலையத்தின் மருத்துவ அலுவலர் புஷ்பமாளிகா, சுகாதார ஆய்வாளர்கள் கே. ராதாகிருஷ்ணன், ஜே. நிவாஸ் ராஜா ஆகியோர் ஐயோடின் கலந்த உப்பின் அவசியம் குறித்து பேசினர்.

சிறப்பு விருந்தினராக உணவு பாதுகாப்பு அலுவலர் எ. கர்ணன் பங்கேற்று பேசியதாவது, “இதயத்துடிப்பு, வளர்ச்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை மற்றும் தசை சுருக்கங்கள் போன்ற பல உடல் செயல்பாடுகளை பாதிக்கும் சுரப்பியான தைராய்டுக்கு அயோடின் ஒரு நுண் ஊட்டச்சத்து ஆகும். அயோடின் குறைபாடு கர்ப்ப காலத்திலும் குழந்தை பருவத்திலும் தீங்கு விளைவிக்கும்.

மேலும் இது கற்றல் திறன் இழப்பு, மனநல குறைபாடு, கருச்சிதைவு ஆகியவற்றையும் ஏற்படுத்தும். அயோடின் குறைபாட்டின் தீவிர விளைவுகளாக குழந்தை இறப்பு விகிதம், காயிட்டர் எனப்படும் முன் கழுத்துக் கழலை, ஹைபோ தைராய்டுசம் எனப்படும் நாள்பட்ட உடல் சோர்வு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவை உள்ளன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் 200 கோடி பேர் அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை சரி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக அயோடின் குறைபாடு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றார்.சுகாதார ஆய்வாளர்கள் உப்பில் அயோடின் இருப்பதை உறுதி செய்யும் சோதனையையும் உருளைக்கிழங்கு, உப்பு, வடித்த கஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை கொண்டு வீட்டிலேயே உப்பில் ஐயோடின் இருப்பதை உறுதி செய்யும் சோதனையையும் செய்து காட்டினர். அயோடின் பற்றாக்குறையை சரி செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கருத்தரங்கில் என்எஸ் எஸ், என்சிசி மாணவர்கள் சுமார் 100க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *