பேரறிஞர் அண்ணா !

பேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்
பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர்
பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர்
பெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர்
பெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
பெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர்
கருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர்
கருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர்
அழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்
அற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர்
கடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர்
காஞ்சியில் பிறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர்
கஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர்
குற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர்
குன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர்
கட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர்
கட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர்
அடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர்
அனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர்
உருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர்
ஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர்
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா
உலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா

பகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர்
பண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர்
பத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர்
பேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர்
மூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர்
மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர்
மாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர்
எதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர்
எதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர்
சொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர்
சொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர்
தமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர்
தமிழ் மொழிக்கு அரியணை தந்து உயர்த்தியவர்
தமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர்
தமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர்
பெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர்
பெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர்
மெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா
மெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *