எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரி அமைந்துள்ளது. 135 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் 6 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி உள்ளது. ஏரியில் 116 ஏக்கர் ஆகாயதாமரை படர்ந்துள்ளது. ஏரியின் மூலம் 2500 ஏக்கர் நேரடி பாசன வசதியும் ஏரிக்கு நீர் வரும் மணிக்கணையாற்றின் மூலம் 2000 ஏக்கர் பாசன வசதியும் உள்ளது.
மேலும் ஏரியைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கடலோரப் பகுதி மற்றும் சுற்றுவட்டார இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து கடும் துர்நாற்றத்துடன் நீரின் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதால் ஏரி தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகளும் பொதுமக்களும் அவதியடைந்தர்.மேலும் பெருந்தோட்டம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி நீர்வளத் துறை செயற்பொறியாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பணியாளர்கள் மூலமும் ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலமும் ஆகாயதாமரையை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.