கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
ஆய்வு செய்தார்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், லால்புரம் ஆக்ஸ்போர்ட் பள்ளி, புவனகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கடலூர் மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (31.10.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கடலூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல் நிலையாக 28.10.2025 முதல் 03.11.2025 வரை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
04.11.2025 முதல் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களர்களால் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட உள்ளது. வீடு வீடாக செல்ல உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பயண அட்டவணை விவரம் முன் கூட்டியே சம்மந்தப்பட்ட பாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் அச்சடிக்கப்பட்ட பதாகைகளாக ஒட்டப்பட்டும். மேலும், ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்பட உள்ளது. வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பயண அட்டவணை விவரம் முன் கூட்டியே சம்மந்தப்பட்ட பாகத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் தெரிவிக்கப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 04.11.2025 அன்று தொடங்கி 04.12.2025 வரை முடிவடைகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்கள் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் கணக்கெடுக்கும் படிவத்தில் வாக்காளர்களின் விவரங்கள் பகுதியில் வாக்காளர் பெயர், அடையாள அட்டை, உறவினரின் பெயர், உறவு முறை, சட்டமன்ற தொகுதியின் பெயர், பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பூர்த்தி செய்திடவும், 2002 வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இடம்பெறாமல் இருந்தால் கணக்கெடுக்கும் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறவினரின் பெயர், அடையாள அட்டை, உறவு முறை, சட்டமன்ற தொகுதியின் பெயர், பாகம் எண், வரிசை எண் போன்றவற்றை பூர்த்தி செய்திடவும் வழிவகை செய்திட வேண்டும். அச்சமயம் எவ்வித ஆவணமும் இணைத்து வழங்க தேவையில்லை.
குறிப்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்க்க செல்லவும், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்களை கண்டறியவும், வாக்காளர்கள் குறிப்பாக, நகர்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிக இடம் பெயர்ந்தவர்கள் இணையதளம் மூலமாகவும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்ப வழிவகை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் 09.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கணக்கெடுப்பு படிவத்தை ஒப்பமிட்டு அளிக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோரைகளை கண்டறிந்து வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் பெயர் பொருந்தாத / இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்படும். அவ்வாறு அறிவிப்பு வழங்கிய இனங்களுக்கு தகுதியின் அடிப்படையில் விசாரித்து, அவர்களின் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். அறிவிப்பு கடிதம் பெற்ற வாக்காளர்கள் உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனை காலமான 09.12.2025 முதல் 08.01.2026 வரை தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டை முகவரிக்கான ஆதாரமாக மட்டுமே கருதப்படும். குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது.
பின்னர் 09.12.2025 முதல் 31.01.2026 வரை விடுபட்ட வாக்களர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்து தகுதி உள்ளவர்கள் 07.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
01.01.2026-னை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர படிவம் 6உடன் உறுதிமொழி படிவத்தினை வழங்கினால் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஜனநாயகம் வலுப்பெற அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.
ஆய்வின் போது வாக்குப்பதிவு அலுவலர்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் இ.ஆ.ப., கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.