திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 7.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும். சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை – மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்

திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிவதை முன்னிட்டு, இ-பாஸ்(ePass) முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் TNEGA-வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ-பாஸ் பதிவு செய்து கொடைக்கானலில் பயணம் மேற்கொள்ளலாம். இ-பாஸ் தேவைப்படுபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கியூ ஆர் கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் அவர்களது கைப்பேசி எண் வாயிலாகவும், வெளிநாடுகளிலிருந்து கொடைக்கானலுக்கு வருகை தருபவர்கள் அவர்களது இ-மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களை சமர்ப்பித்து, இ-பாஸ் பதிவு செய்து கொண்டு, பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்த மென்பொருளில் சுற்றுலா பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம்; உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட ஒவ்வொரு வாகனங்களும்; இ-பாஸ் பதிவு செய்து வருகை தர வேண்டும். கொடைக்கானலில் கோடை காலத்தையொட்டி, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் பரிசார்த்த முறையில் இந்த இ-பாஸ் நடைமுறை 07.05.2024 முதல்; 30.06.2024 வரை அமல்படுத்தப்படுகிறது.

மேலும், கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசுப் பேருந்துகளின் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விவரங்கள் நேரிடையாக போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இ பாஸ் 3 வகையான அடையாளகோடுகளுடன் வழங்கப்படவுள்ளது. உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சைநிற அடையாளக் கோட்டுடனும், வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிற அடையாளக்கோட்டுடனும், சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதாநிற அடையாளக் கோட்டுடனும் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொடைக்கானல் நகராட்சியின்(வெள்ளி நீர்வீழ்ச்சி) சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்ட உள்ளூர்; வாகனங்களுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரையிலான காலகட்டத்திற்கு ஒருமுறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெற்றுக்கொண்டால் போதுமானது.


மேற்காணும் சுங்கச்சாவடியின் சுங்கக் கட்டண விலக்கிலிருந்து விடுபட்ட உள்ளுர் வாகனங்களுக்கு, வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலகுண்டு பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது சுங்கச்சாவடி (வெள்ளிநீர்வீழ்ச்சி) அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து உள்ளுர் இபாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர். சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் ‘epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *