பொள்ளாச்சியில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார் ஆட்சியர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா என்பதை போக்குவரத்து துறையின் கண்காணிப்பு குழுக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். பொள்ளாச்சியில் இந்தாண்டிற்கான பள்ளி வாகன ஆய்வு நேற்று நடைபெற்றது.

பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. ஓட்டுநர்களுக்கு வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து விளக்கப்பட்டது. வாகனங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும், வாகனத்தில் பள்ளி பெயர் மற்றும் முகவரி, மொபைல் எண் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா முன்னிலையில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளி வாகனங்களின் படிக்கட்டு, அவசர கால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 20 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.


இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் கூறும்போது,‘ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு பள்ளி வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 66 பள்ளிகளின் 372 வாகனங்கள் உள்ளன. அதில், நேற்று மொத்தம், 300 அதிகமான வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன.அதில் சிறு குறைபாடுகள் உள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டது.

அந்த வாகனங்கள் 7 தினங்களுக்குள் குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதற்கு பின் அந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்படும் என்றனர்.

இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கூறியதாவது: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் 372 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்துள்ளன. மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்கிறது. 2012- ஆண்டு வெளியிடப்பட்ட பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயசந்திரன், பொள்ளாச்சி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *