கமுதி – சுந்தரபுரம் களத்தடி முனீஸ்வரர் கோவில் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் பக்தர்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி- சுந்தரபுரம் பகுதியில் உள்ள ஊரணியின்
கரையில் களத்தடி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரதி பெற்ற இக் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சில மாதங்களாக ஊரணி கரை முழுவதும் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து கோவிலே தெரியாத அளவில் காணப்படுகிறது. இதனால் இக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் விஷ பூச்சிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாக மாறியுள்ளது.
சிலர் இப்பகுதியில் மது அருந்தி கொண்டு இருப்பதால்,பெண்கள் இக் கோவிலுக்கு வருவதற்கு அச்சமடைந்து வருகின்றனர். வருடாவருடம் மார்கழி மாதத்தில் தினந்தோறும் இக் கோவிலில் அதிகாலை பூஜை நடைபெறுவது வழக்கம். தற்போது வரும் மார்கழி மாதம் அதிகாலை பூஜைக்கு பக்தர்கள் செல்வது குறித்து அச்சமடைந்துள்ளனர்.
எனவே பக்தர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி காட்டு கருவேல மரங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்