பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது. இதையொட்டி முதல் கட்டமாக ரெயில் நிலையத்தை அளவீடு செய்து காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி சாலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து ரெயில்வே கட்டிட சிவில் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:- மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டரில் கட்டிடம் அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன காப்பகங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது. ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரெயில்வே பார்சல் பகுதி ரெயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த பணிகள் 3 வருடத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *