நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,”ஹைகூ ” உலகில் தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக் கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,”சுட்டும் விழியைச் ” சுழட்டிவிட்டிருக்கிறார்.

இவரது சமுதாயப் பார்வை நம்மைப் பலவாறு சிந்திக்கவைக்கிறது.

எப்படி?

கொஞ்சம் பார்க்கலாம் வாங்க…

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது “சுட்டும் விழியில்” நிரூபித்திருக்கிறார்.”நல்ல கூட்டம் பித்தலாட்டப் பயிற்சி சோதிடம்.”
மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா?
பித்தலாட்டத்தை நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.

“பலனில்லை
பெயர் மாற்றம்
எண்ணம் மாற்று.”

எனும் கவிதை பெயர் மாற்றத்திலோ, இட மாற்றத்திலோ உன் உயர்வு இல்லை: உன் எண்ணம் மாறி உயர்ந்தால் உன் வாழ்வு உயரும் என்ற கருத்தைச் சொல்லுகிறது.

இன்றுள்ள நகர்ப்புற அசுத்தங்களைக் கண்டு மனம் வாடும் கவிஞர், “சுத்தம் தானே சோறு போடும்: அசுத்தம் நோய்க்கு நுழைவாயில் அல்லவா? மனிதா இதைக் கொஞ்சம் யோசி!” என்கிறார்:

“சுத்தமே சுகம்
அசுத்தமோ நோய்
குப்பையில் நகரம்.”

பசுமையான வயல்களும் , கழனிகளும் நமக்கு உணவளிக்கும் அன்ன லட்சுமித் தெய்வங்கள்.அப்படிப்பட்டவைகள் இன்று அழிக்கப்பட்டு அவ்விடங்களில் மாளிகைகளும்,தொழிற்சாலைகளும் பெருகிவருவது அநியாயம் என்று பதறுகிறார்.
ஆசிரியரின் பதற்ற வரிகள்தான், ” பன்னாட்டு நிறுவனங்களால் ,கொள்ளை போனது , பச்சை வயல்.என்பவை ஆகும்.

மேற்சொன்ன ஆசிரியரின் கவிதை வரிகளில் இருந்து, அவரது’ சமுதாய அக்கறை ‘ தெரிகிறது. ஒரு கவிஞன் என்பவன் கற்பனயில் மிதப்பவன் மட்டுமல்ல ; அவன் தான் வாழும் சமுதாயத்தின் ‘மாசுகளைக் , குறைகளை’
மக்களுக்குச் சுட்டிக் காண்பித்து , அவற்றைக் களைய ‘ கவிதை உருவில் ‘ கோடரியையும் கொடுக்க வல்லவன் என்பதை நம் கவிஞர் நிரூபிக்கிறார்.

எந்த ஒரு படைப்பாளிக்கும் சமுதாயப் பற்று வேண்டும் .கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு, சமுதாயத்தின் மீது அளவுகடந்த பற்றும் , பாசமும் இருக்கிறது என்பதற்கு இந்த நூலில் பல கவிதைகளை எடுத்து வைக்கலாம்.

தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட நம் கவிஞர், தன் காதலியின் பெயர் தமிழில் இருப்பதைப் பெருமையாகக் கூறுகிறார்:

“இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்”

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து ‘ பாடுகிறார் :

“யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ்.”

இன்று இளைஞர்களும் , இளம்பெண்களும் அவசர அவசரமாகக் காதல் என்ற பெயரில் ,கட்டுண்டு , காதல் திருமணம் செய்வது தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்கன்பிக்கும் கவிஞர்…

“பக்குவப்படாத காதல்
அவசரத் திருமணம்
விரைவில் மணவிலக்கு.”

என்று இன்றைய ‘விவாகரத்து ‘ விடயங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்.

இவ்விடத்தில் எனது கவிதை ஒன்றை நினைவு கூறுகிறேன் .

“இளமைக் காதல் சிறுகதை:
வயசுக் காதல் தொடர்கதை :
முதுமைக் காதல் கவிதை!”

பருவத்தே பயிர் செய்’ என்பது போலவே பருவம் வந்து , மனம் பக்குவப்பட்டபின்னரே திருமணம் செய்துகொள்ளவேண்டும்!

இப்படியாகக் கவிஞர் தனது ” ஹை கூ ” நடையில் மூன்று வரிகளில், முப்பது வரிக் கட்டுரைச் செய்திகளை அடக்கி உள்ளார்.

சிந்தனைக்குப் பல கவிதைகள் உள்ளன….எடுத்துக்காட்டாக ஒன்று:

“சோகத்தில் உளி
பாராட்டு வாங்கினர்
சிலையோடு சிற்பி.”

முத்தாய்ப் பாய் இவரது கவிதை பற்றி எனது சிறப்பு விளக்கம்:

” கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதி மரம்”

என்ற கவிதைப் படித்தபோது , நான் மதுரை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை முடித்து , விமானத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். கவிதைப் படித்ததும் , கவி நண்பர் இரா.இரவி அவர்களை கைபேசியில் அழைத்து, ” இப்போது போதி மரம் என் கையில் !” என்று கூறினேன்.

வாசகருக்கும் , ஆசிரியருக்கும் இதன் முழு அர்த்தமும் புரியும் என நினைக்கிறேன் …….அந்த அளவிற்கு , “சுட்டும் விழி ” எனக்குள் “ஞானம் ” புகுத்தியது என்பதுதான் உண்மை!

ஹைகூ கவிஞரை வாழ்த்துகிறேன்.

மேலும் பல அரிய கருத்துக்கள் கொண்ட நூல்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *