இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வழிபட வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்கள் அடையாள அட்டையை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. மேலும் கலெக்டர் பழனி தலைமையிலும் இரு சமூத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 8 முறை இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு திடீரென சீல் வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர். கோவிலுக்கு சீல் வைக்கப் பட்டதால் மேல்பாதி கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை சுற்றிலும் பேரி கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர். விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பிவிடப்பட்டது. அதே போல் கோலியனூர் கூட்டு ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டது. மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே வருகிற வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஆஜராகுமாறு விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *