நாமக்கல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான, சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் (13.06.2023- இரவு) நடைபெற்றது.

இதில், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் வி. பி. துரைசாமி மற்றும் டாக்டர்.கே.பி. இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இந்தியா பல ஆண்டுகளாக இராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது அவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வளர்ந்துள்ளது என்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களினால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில், மத்திய தகவல்- ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர். எல். முருகன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய பா.ஜ.க அரசு கடந்த 9 ஆண்டுகளில், செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அதன் சாதனைகள் குறித்தும் விளக்கமாக பேசினார்.

அப்போது பேசிய டாக்டர் எல். முருகன்,கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் – திமுக கூட்டணியின், ஊழல் மலிந்த இருண்ட காலத்தை போக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இரட்சகனாக தேசத்தை காக்கும் தலைவராக பிரதமர் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன்னுடைய புனித நூலாக உறுதி ஏற்று பாராளுமன்றத்தில் ஆட்சியை தொடங்கினார்.

ஏழை-எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் நேரடியாக கொண்டு சென்று சேர்பதற்காக இலவசமாக ஜன் தன் வங்கி கணக்கை தொடங்கியதால், அரசின் மானியங்கள் திட்டங்கள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் கிடைக்கிறது.

பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் கொண்டு வந்ததால் ஏழை எளிய மக்களின் வீடு கனவு நனவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்து 9 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் கீழ் பயன் அடைந்துள்ளனர்.

அந்த வீட்டிற்கான பட்டா தாய்மார்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, 5 முதல் 10 கி.மீ., தூரத்திற்கு சென்று தண்ணீர் கொண்டு வந்த காலம் இருந்தது. இதனை நீக்கி ஒவ்வொருவர் வீட்டிற்கும் நேரடியாக குழாய் மூலம் சுகாதாரமான குடிநீரை ஜல் ஜீவன் திட்டம் வழங்கி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 3.50 லட்சம் குடும்பங்கள் ஜல் ஜீவன் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ், சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக இந்தியா முழுவதும் 8 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 800 கிலோ மீட்டருக்கு மேல் கிராமசாலைகள் புதியதாகவும், மேம்படுத்தி போடப்பட்டுள்ளன.

மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியின் போது, 2 ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று ஒரு பக்கம் இருந்த நிலையில், அதனை நீக்கிய பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு.

2014 க்கு முன்பு விவசாயிகள் நிறைந்த நமது இந்திய நாட்டில் விவசாயிகள் தற்கொலை, விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுவது போன்ற சூழல் இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறு-குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் 11 கோடி பேரும், தமிழ்நாட்டில் 45 லட்சம் பேரும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் விவசாயிகளும் ரூ. 200 கோடி அளவிற்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி பெற்றுள்ளனர்.

தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் கோனூரில் கூட பெண்கள் கிராமப்புறங்களில், கழிவறை இல்லாமல் எப்போது இருட்டாகும் அல்லது விடியும் முன்பு வெளியே போக சிரமப்பட்டு வந்த நிலையை போக்கி, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 1.50 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் வசதியுடன் டாய்லெட் கட்டித் தரப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 80 ஆயிரம் பெண் குழந்தைகள் நாமக்கல் மாவட்டத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

மக்களுக்கான சேவை, நல்ல ஆட்சி, ஏழை எளிய மக்களின் நலன் இந்த 3 கொள்கைகளை தாரக மந்திரமாக கொண்டு கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டிலும் தொற்று பாதிப்பு நேரத்தில் பா.ஜ.க வினர் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு உதவினார்கள். ஆனால் பிற கட்சியினர் உயிருக்கு பயந்து கொண்டு மக்களுக்கு உதவ முன் வரவில்லை.

கொரோனா நேரத்தில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரதம மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தில்,80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது, வரும் டிசம்பர் 2023 வரை இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி கடனில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, எந்தவித கேரண்டியும் இன்றி ரூ. 10 ஆயிரம் வரை தேசிய வங்கியில் கடன், மேலும் தொடர்ச்சியாக கடனுதவிகள், பிரதம மந்திரி ஷ்வா நிதி மூலம் வழங்கப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளில் மகத்தான ஆட்சியை கொடுத்து அடிப்படை கட்டமைப்புகளை முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்தி உள்ளார்.

நாமக்கல் மற்றும் இராசிபுரம் பகுதிகளில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் 3 உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் 4 வழி, 6 வழி, அதிநவீன விரைவு சாலைகள் கதிசக்தி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
உள்கட்ட அமைப்பை மேம்படுத்துவதில் பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இன்று உலகமே உற்றுநோக்கும் நாடாக இந்திய நாடு திகழ்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் முனையில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த 23 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டார்கள். நமது பிரதமர் ரஷ்ய, உக்ரைன் அதிபர்களிடம் பேசி போரை நிறுத்தி, இந்தியர்களை பத்திரமாக உள்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஐநா சபையிலே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை உரக்கச் சொல்லி தமிழுக்கு பெருமை சேர்த்தார்.

அதேபோல காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டது, தமிழக ஆதீனங்களுக்கும் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்தார்.

கடந்த 9 ஆண்டுகளில், அடுத்த 25 ஆண்டுகளில் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பா. ஜ. க. பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க மாநில துணைத்தலைவர்கள் டாக்டர் கே. பி. இராமலிங்கம், வி. பி. துரைசாமி, மாவட்ட தலைவர் என். பி. சத்தியமூர்த்தி, எம். இராஜேஷ்குமார், கட்சி நிர்வாகிகள் செந்தில்நாதன், சேதுராமன், முத்துக்குமார், வடிவேல், பாண்டியன், ஹரிஹரன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் எம். ஸ்வாமி தயாளன், மாநில நிர்வாகிகள் ஆர். லோகேந்திரன், புவனேஸ்வரி ஹரிஹரன், இசைவாணன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *