கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக காற்று தினம் கடைபிடிக்கப்பட்டது

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் கலையரசி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் கலந்து கொண்டு உலக காற்று தினம் குறித்து பேசியதாவது
உலகக் காற்று நாள் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.
மனித நாகரீகம் வளர வளர இயற்கையானது சீர்கேடு அடைந்து வருகிறது. உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. எனினும், சில நேரங்களில் இந்த காற்று தனி உருவெடுத்து தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதிதீவிர காற்று புயலாக மாறினால் ஆபத்து ஆதிக்கம் செய்யும் என்பதும் உண்மை.

சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சகம் சார்பில் 2014 இல் காற்று தரக் குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமது சுற்றுப்புறக் காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் ஒரே எண் ஒரே நிறம் ஒரே விளக்கம் என வரையறுக்கப்பட்டது.

மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நாடு முழுவதும் 240 நகரங்களில் தேசியக் காற்று கண்காணிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் காற்றுத் தரக் கண்காணிப்பு மையம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக காற்றின் தரத்தைக் கண்காணித்து வருகின்றது. இதற்கான முழுவிவரங்களும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. ஐரோப்பிய காற்றாற்றல் ஆணையமும், உலகளாவிய காற்றாற்றல் மன்றமும் காற்றின் ஆற்றலை பற்றிய விழிப்புணர்வு குறித்தும், அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த தினத்தை அறிமுகம் செய்தது. முதன்முதலில் 2007-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது ஓர் உலகளாவிய நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. தூய்மையான காற்று ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. மனிதன் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும்.காற்று இல்லாமல் நாம் இல்லை. காற்று மாசை ஏற்பாடுத்தாமல் தவிர்ப்பதற்கு இந்நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். என்று பேசினார்கள் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மேரிபுஷ்பம்,விஜயராணி, ரேவதி இல்லம் தன்னார்வலர்கள் காஞ்சனா, ராஜலட்சுமி, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *