தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் நேற்று பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை கைது செய்தனர். சென்னை திநகரில் உள்ள எஸ்ஜி சூர்யா வீட்டிற்கு நேற்று இரவு 10 மணியளவில் வந்த மதுரை போலீசார் சூர்யாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காக கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழ்நாட்டில் நிலவுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
மதுரை எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து எஸ்.ஜி. சூர்யா பதிவிட்ட டுவிட்டில், புரச்சீ போராளி, விளம்பர அரசியல் பிரியர் மதுரை எம்.பி திரு.சு வெங்கடேசன் அவர்களுக்கு வணக்கம்! மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விசுவநாதன், மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று பின்னர் சிகிச்சை பலனின்றி தூய்மை பணியாளர் ஒருவர் இறந்துள்ளார். சட்டப்படி குற்றம் என தெரிந்தும் அந்த பாவப்பட்ட தூய்மை பணியாளரை அந்த கழிவு நீர் கால்வாயில் இறங்கி வேலை செய்ய சொன்னது உங்கள் சக தோழர், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் விசுவநாதன் தான். இறந்தவர் பட்டியலின சகோதரர். எங்கே உங்கள் செங்கொடி? எங்கே உங்கள் போராட்ட குணம்? எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்? ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக் கொண்டு வருவீர்கள், இப்பொழுது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா? அல்ல பம்மி விட்டீர்களா? ஏன் உங்களது செங்கொடி உங்கள் சக தோழர்களுக்கு எதிராக ஏறாதா? அல்லது உங்கள் செங்கொடி பட்டியலின சமுதாயதய சகோதரர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடாதா? பிரிவினைவாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது, மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே!’ என பதிவிட்டிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *