வேலூர், வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்கல் என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேகர் என்கிற சங்கர் இந்த மலை கிராமத்தின் நாட்டாண்மையாக இருக்கிறார். இவரது அண்ணன் மகனின் திருமணம், வெள்ளைக்கல் மலையில் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இதற்காக நாட்டாண்மை சங்கர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவிற்கு தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 5-ஆம் தேதி ஊசூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி விசாரணைக்காக அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் சங்கர் மீது சாராயம் காய்ச்சி விற்றதாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், எங்கள் மலை கிராம வழக்கப்படி திருமணத்தின்போது நாட்டாண்மைதான், மணமகனிடம் தாலி எடுத்து கொடுப்பார். அப்போதுதான் திருமணம் நடக்கும். எனவே அவரை விடுவிக்கவேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் சங்கரை விடுவிக்கவில்லை. இதற்கிடையில் அத்தியூர் ஊராட்சி தலைவரும், வெள்ளைக்கல் மலை கிராம மக்களும், நாட்டாண்மை சங்கரை அவரது அண்ணன் மகன் திருமணத்துக்குள் ஜாமீனில் அழைத்து வர முயற்சித்தனர். ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனால் வெள்ளைக்கல் மலையில் நேற்று நடக்க இருந்த திருமணத்தில் மலைகிராம வழக்கப்படி தாலி எடுத்துக்கொடுக்க நாட்டாண்மை இல்லாத நிலையில் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர்.
திருமணம் நின்று போனதால் உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *