திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வடிகால்கள், கழிவு நீர்ச் சாக்கடைகள் நிரம்பி வழிந்தன. சாலைகள்தோறும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடியுடன் காற்றும் வீசியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினர். இந்த மழையால் திருச்சி மாவட்டத்தில் பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்தது.
இந்த நிலையில் திருச்சி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரி உள்ளது.
இதனருகில் அக்கல்லூரி மாணவிகள் தங்கும் மகளிர் விடுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து பார்வையிட்டு இடிந்த இடத்தில் மீண்டும் சுவர் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதே போன்று கடந்த 2021 ஜூலை 01ம் தேதி திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில், கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ சேதமடைந்தது குறிப்பிடதக்கது.
இது போன்ற சிறு மழைக்கே அடிக்கடி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி வளாக சுற்றுச்சுவர் இடிந்து விழுகிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சுற்று சுவர்களை ஆய்வு செய்து சேதமடைந்துள்ளவற்றை அகற்றி புதிய சுற்றுசுவர்களை கட்ட வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.