அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்காவில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் பள்ளி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அவர்களின் கீழ் உள்ள மாவட்ட நிலை அலுவலர்களுடன் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் நான்காம் புதன்கிழமை ஒரு தாலுகா தேர்வு செய்யப்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்திட தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்களின் கள ஆய்வுப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஜெயங்கொண்டம் நகர்ப்புறம், மேல குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை பார்வையிட்டு கற்றல் திறன் குறித்து மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார் , அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு மாணவிகளின் எண்ணிக்கை, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும், கழிப்பறை வசதி, குளியலறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் விடுதியினை தொடர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும் எனவும், மாணவிகளுக்கு உணவினை உரிய நேரத்தில் தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு காய்ச்சல் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, கட்டுப்பாட்டு அறை, மருந்து கிடங்கு, மருந்து பொருட்களின் இருப்புப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் சிகிச்சைகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதிகளை ஏற்படுத்;தவும் சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து ஜெயம்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்தும் மற்றும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டறிந்து ஆய்வு செய்தார்

இந்த ஆய்வில் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *