மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சித்திரை 1ம் தேதி குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்துடன் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

இதில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று (12ம் தேதி) நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பெரியவர்கள் சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

காலை 9 மணிக்கு பச்சை மூங்கில் ஏற்றி அதன் பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகமும் இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ் வீரமணி மற்றும் செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் பெரிய மண்டகப்படிதாரர் சி.வி.பாலுசாமி, சி.வி. நல்லுசாமி வகையறா வாரிசுதாரர்கள் செய்திருந்தனர். வழி நெடுக பக்தர்களுக்கு பொதுமக்கள் நீர்மோர், பானக்கம், சர்பத் மற்றும் அன்னதானம் வழங்கினர். லட்சக்கணக்கானோர் விழாவை கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *