வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தங்கள்
நேர்த்திக்கடனை செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இவ்வாண்டு கடந்த மார்ச் எட்டாம் தேதி பூச்சொறிதல் விழா உடன் தொடங்கி, பத்தாம் தேதி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 17 ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி உடன் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது.
நேற்று (31 ஆம் தேதி) புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. விழாவில் முதல் நாள் சனிக்கிழமை இரவு முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாய் பாடைக்காவடி, அலகு காவடி, பால்காவடி போன்ற காவடிகள் எடுத்து செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 10 மணிஅளவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெற்றது.
அது சமயம் தமிழகத்தின் தலை சிறந்த நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி விடியும் வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் நேர்முக வர்ணனை அம்மாபேட்டை புலவர் பன்னீர்செல்வம் நிகழ்த்தினார்.
விழாவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்தலைமையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப்இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வலங்கைமான் பேரூராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள், கழிவறை வசதிகள், சாலையில் வெப்பத்தை தணிக்க தண்ணீர் தெளித்தல் போன்ற சுகாதாரப் பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தீயணைப்புத் துறையினர் தங்கள் வாகனத்தைஆலயத்தின் எதிர்ப்புறம் நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக ஆலங்குடி வட்டார சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ வசதி செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ.ரமேஷ், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், வரதராஜன் பேட்டை தெருவாசிகள்,இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.