தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி மற்றும் செங்கோட்டை அருகே உள்ள புதூர் பேரூராட்சி பகுதியில் பல நாட்களாக குடிநீர் வரவில்லை எனவும் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது இதனால் அந்த பகுதியில் அடிக்கடி கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்த புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து புதூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைப்போலவே செங்கோட்டை நகராட்சி 1- வது வார்டு பகுதியான காலங்கரை பகுதியில் பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அதிகாரிகளுடன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏராளமான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *