மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் உலகக் கவிஞர் தினத்தினை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம் மாங்குடியில் அமைந்துள்ள சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 134 ஆவது பிறந்த நாள் உலகக் கவிஞர் தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. சங்கப்புலவர் களில் தனித்த சிறப்போடு விளங்கியவர் தென்காசி மாவட்டம் மாங்குடி கிராமத்தில் பிறந்தவர் மாங்குடி மருதனார்.

இவர் இயற்றிய 13 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கியங்களில் இவரது பாடல்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. இத்தகு சிறப்புகளை உடைய மாங்குடி மருதனாருக்கு 1992 ஆம் ஆண்டு தமிழக அரசால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர் பாண்டிய மன்னரான தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் புலவராக இருந்தவர். புறநானூற்றில் இவரது பெயர் மாங்குடி கிழார் என்று உள்ளது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு வாழ்வின் நிலையாமைப் பொருளுணர்த்த மதுரைக்காஞ்சி எழுதப்பட்டது. மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும். இந்த நூல் பண்டைய மதுரையின் உன்னதங்களின் சாட்சியாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமாகும்.

தமிழின் தொன்மை பண்பாட்டு அடையாளங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும், எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், சங்க புலவர்கள் இயற்றியுள்ள பல பாடல்கள் உதவியாக உள்ளன. இத்தகு சிறப்பு வாய்ந்த மாங்குடி மருதனாரின் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை மண்டிலத் துணை இயக்குநர் வ. சுந்தர், வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள். தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *