தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் 96 கேமராக்கள் பழுது

அதிகாரிகள் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தென்காசி

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள 96 சிசிடிவி கேமராக்கள் திடீர் செயல் இழப்பு – அதிகாரிகள் – வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 1,743 வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் யுஎஸ்பி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நான்கு அடுக்கு பாதுகாப்புடன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி சுமார் 16 கேமராக்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மொத்தம் 96 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கேயே தங்கிருந்து பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி மேலும் ஏராளமான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது
இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் முழுவதும் செயல் இழந்துள்ளது.

அதனைதொடர்ந்து, அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் உடனடியாக வாக்குப்பதிவு என்னும் மையத்திற்கு நேரில் சென்றார். தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பின் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்து மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வந்தனர்.

இருந்தபோதும், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடம் செயல் இழந்த சம்பவம் அங்கு இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இதுபற்றி உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்ததோடு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தென்காசி அருகே உள்ள கொடி குறிச்சி யு எஸ் பி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு மத்திய ஆயுதப்படை உள்ளடக்கிய மூன்றடுக்கு பாதுகாப்புடன் கூடிய முத்திரை இடப்பட்ட பாதுகாப்பு அறையில் உள்ள இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை இடியுடன் பெய்த கனமழையினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துள்ளது உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை சுற்றிலும் செயலிழந்த கேமராக்கள் சரி செய்யப்பட்டு மாலை 6:30 மணி அளவில் கேமராக்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் வாக்கு என்னும் மையத்தின் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள செயலிழந்த கேமராக்களை சரி செய்து உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *