திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும் திட்டம் தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, முன்னாள் எக்ஸ்னோரா தலைவர்கள் பாராட்டு, புதிய நிர்வாகிகள் பாராட்டு, நலத் திட்டங்கள் வழங்கும் விழா) நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு எக்ஸ்னோரா கிளை தலைவர் (பொறுப்பு ) பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். மேனாள் அரிமா சங்க ஆளுநர் வி.எஸ். தளபதி, மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார், சென்னை யூனியன் வங்கி மேலாளர் சு.விஜயசேகர், முன்னாள் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் மற்றும் மாவட்ட மரக்கன்றுகள் நடும் பணி இயக்குநர் ம.ரகுபாரதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, எக்ஸ்னோரா மாநில நிதி நிர்வாக தலைவர் டி.ஏ. முனவர்தீன் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், சமூகத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எக்ஸ்னோரா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா.இந்திரராஜன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி விழா உரை நிகழ்த்தினார். மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் வெங்கடேச பெருமாள், மாவட்ட எக்ஸ்னோரா துணை தலைவர் அப்துல் கலீம், சக்தி எக்ஸ்னோரா தலைவர் தேவிகா ராணி, பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் மகிழ்வுரை வழங்கினர். மேலும் தேசிய பசுமைப் படை மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ம.ரகுபாரதி முன்னிலையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இறுதியில் புதிய தலைவராக பொறுப்பேற்ற இரயில்வே சு.தனசேகரன் ஏற்புரை நிகழ்த்தினார் புதிய நிர்வாகிகளாக, சு.தனசேகரன் தலைவராகவும், பா. சீனிவாசன், க.வாசு ஆகியோர் துணை தலைவராகவும், சி.வினோத்குமார் செயலாளராகவும், அ. பூவிழி பொருளாளராகவும், இணை செயலாளராக வந்தை குமரன், துணை செயலாளராக ஆர்.பாஸ்கரன், இணை பொருளாளராக வெ.அரிகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளராக க.பூபாலன், இயக்குநராக என்.சுரேஷ் பாபு, ஆலோசகர்களாக மலர் சாதிக், ம.ரகுபாரதி உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பதவி ஏற்றனர். அனைவருக்கும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் துணைத் தலைவர் க.வாசு நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.