பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சிசத்தலைவர் அவர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப் பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 333 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.17,11,000 மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பயிர் கடனுதவிக்கான ஆணைகளையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1,66,875க்கான நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க மானியத்தொகைக்கான ஆணைகளையையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் விபத்து மரணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகை்கான ஆணைகளையும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 4 ஆயிரத்து 750 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தொடர்ந்து, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தடகளப் போட்டியிலும், நீச்சல் போட்டிகளிலும் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் தாங்கள் வென்ற தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துபெற்றனர். மாநில அளவில் பாரா நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் நவம்பர் 15 முதல் 18 வரை ஐதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.