திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் துவக்க உரையாற்றினார்.

செயலர் குணசேகரன்,சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் திருச்சி முகமது சுபேர், சென்னை காயின் கிளப் தலைவர் மணிகண்டன், கோவை பாலு, தஞ்சை சையது மீரான், கரூர் சந்துரு, துறையூர் பெரியசாமி, பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, லட்சுமி நாராயணன், இளம்வழுதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீராஜராஜ என்ற தேவநாகரி எழுத்துக்கள் பொறித்த ராஜராஜ சோழ நாணயங்கள் குறித்து சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் கிருஷ்ணகிரி மதன் பேசுகையில்,
முதலாம் இராஜராஜ சோழன் அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும்.
பொது ஊழி (CE): இது கி.பி. (கி.பி.) என்பதற்கு மாற்றான சொல்லாகும்.
பொது ஊழிக்கு முன் (BCE): இது கி.மு. (கி.மு.) என்பதற்கு மாற்றான சொல்லாகும்.மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்துவதற்காக, குறிப்பாக கல்வி மற்றும் வரலாற்று ஆவணங்களில், BCE/CE என்ற முறையை பயன்படுத்துகின்றனர் அதன்படி பொ.ஊ. குறிப்பிடுகிறோம்.

முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னரே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே. இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார்.

இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988). தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், பொருளாதாரம் பற்றிய ஆய்வில் சோழர் கால நாணயங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ராஜராஜ சோழர் காலத்தில் தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு உலோகத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாணயங்களில் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வரவேற்க, நிறைவாக மன்சூர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், ஸ்ரீரங்கம் கார்த்திகேயன், தஞ்சை முகமது பைசல், திருப்பத்தூர் மகேஷ் விஜய், ஹீராலால், தஞ்சை அப்துல் ரஹும் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *