திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலூக்காவில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவை நீங்கலாக குடமுருட்டி ஆறுக்கும் வெட்டாறுக்கும் இடையே முக்கிய பாசன வடிகால் ஆறாக சுள்ளான் உள்ளது. சுள்ளனாறு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலூகா புரசகுடி என்ற பகுதியில் துவங்கி நரசிங்க மங்கலம் பகுதியில் வெட்டாற்றில் முடிவடைகிறது.
சுள்ளனாறு பல இடங்களில் வடிகால் ஆறாகவும், அவிச்சாகுடி, ஆவூர்,சாலுவம்பேட்டை, கோவிந்தகுடி, வீராணம், மேலநல்லம்பூர், குளக்குடி, தொழுவூர், கீழ நல்லம்பூர்,காங்கேய நகரம், நரசிங்க மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் போது காவேரியின் கிளை நதிகளான குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு ஆகியவற்றில் பாசனத்திற்கு தண்ணீர் வரும் நிலையில் காவிரியின் கிளை நதிகளோடு நேரடியாக இணைப்பு இல்லாத சுள்ளான் ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் வருவது இல்லை. வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னரே சுள்ளான் ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் வருவது கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாக உள்ளது.
இதன் காரணமாக சுள்ளான் ஆறு பகுதி விவசாயிகள் உரிய நேரத்தில் சாகுபடி பணிகளை துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை மாறாக பருவமழைக்குப் பின்னர் காலதாமதமாக துவங்கப்படுவதால் மழைக்காலங்களில் விளைநிலங்கள் பெரிதும் பாதிப்பு அடைகிறது.
எனவே டெல்டா மாவட்டங்களில் பாசன ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது சுள்ளான் ஆற்றுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக கோரி க்கை விடுத்து வருகின்றனர். மேலும் மற்ற ஆறுகளை பராமரிப்பதற்கு போதிய நிதி வழங்கப்படுவது போன்று சுள்ளான் ஆற்றிற்கு நிதி வழங்கப்படுவதில்லை. மழைக்காலங்களில் ஆவூர், கோவிந்தகுடி, ராஜா கருப்பூர், அணியமங்கலம், ரகுநாதபுரம், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், வலங்கைமான், சித்தன்வாளூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் ரெகுலேட்டர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெங்காய தாமரை செடிகள் தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் அடைத்துக் கொள்கிறது
இவற்றை அப்புறப்படுத்துவது விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறைக்கு பெரிய சவாலாக உள்ளது.எனவே பருவமழைக் காலங்களில் பாலங்கள் மற்றும் ரெகுலேட்டர்களில் வெங்காய தாமரைகள் தேங்குவதை அகற்ற உரிய நிதி ஒதுக்கி அதை விவசாயிகள் மூலம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு பாசன ஆறு எவ்வளவு முக்கியமோ அதே போன்று வடிகால் ஆறுகளும் முக்கியமானதாகும். டெல்டா மாவட்டங்களில் பாசன ஆறுகளை தூர்வாரினால் சாகுபடி இலக்கினை அடையும். வடிகால் ஆறுகளை தூர்வாரினால் விவசாயம் மகசூல் இலக்கினை அடையும். இதை உணர்ந்து பொதுப்பணித்துறை சுள்ளான் ஆற்றிற்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திட வேண்டும் என்றும் ஆதிச்சமங்கலம் பகுதியில் சுள்ளான் ஆற்றில் தேங்கியுள்ள வெங்காய தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து வெண்ணாறு கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மற்றும் ஆட்களை பயன்படுத்தி வெங்காய தாமரைகள் அகற்றப்பட்டது.